டெல்லியை சேர்ந்த 56 வயது காவல்துறை அதிகாரி ஒருவர், இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மயானத்தில், 1100 குடும்பங்களுக்கு உதவியிருக்கிறார். மயானத்தில் முழு நேரமாக பணிபுரிவதை தொடர்ந்து, தன் மகளின் திருமணத்தை ஒத்தி வைத்திருக்கிறார்.
டெல்லியின் ஹச்ராத் நிசாமுதின் பகுதி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த, 36 வருட அனுபவம் கொண்ட ராகேஷ் குமார் என்ற காவல் துறை அதிகாரி, டெல்லியிலுள்ள லோதி மயானத்துக்கு கடந்த ஏப்ரல் 13 ம் தேதி பொறுப்பேற்றிருந்தார். தொடர்ச்சியாக மயானத்தில் பணிபுரிந்ததை தொடர்ந்து, மே 7 ம் தேதி நடக்கவிருந்த தன் மகளின் திருமணத்தை தள்ளிவைத்திருக்கிறார் ராகேஷ் குமார்.
இதுபற்றி பேசியிருப்பவர், "நான் தினமும் பாதுகாப்பு கவசங்களும், பாதுகாப்பு ஆடையும் அணிகின்றேன். இருந்தாலும், அதனால் மட்டுமே நான் கொரோனா நெகடிவ்வாக இருப்பேன் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது. ஒருவேளை எனக்கு இருந்து, அது குடும்பத்தினருக்கு பரவிவிட்டால், ஆபத்து. அதற்கு நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதுமட்டுமன்றி, என்னுடைய சேவையும் பணியும் தேவைப்படும் பல குடும்பங்கள் இங்கே தினந்தோறும் வந்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் பணிக்கு விடுமுறை போட்டுவிட்டு, உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவையளிக்காமல், இந்த பேரிடர் நேரத்தில், நான் எப்படி என் மகளுடைய திருமணத்துக்கு சென்று, கொண்டாட்ட மனநிலையில் இருக்க முடியும்?" என மகள் திருமணத்தை ஒத்திவைத்தற்காக காரணம் கூறியிருக்கிறார்.
தினமும் காலை 7 மணிக்கு பணிக்கு வரும் இவர், மாலை வரை அங்கேயே இருந்து கூடுதல் நேரமும் வேலை செய்வதாகவும், இரவு 7 முதல் 8 மணி வரை பணிபுரிவதாகவும் கூறியுள்ளார் அவர். மயானத்தில் சடலங்களை எரிக்க உதவுவது, அங்கே பூஜை செய்ய தேவையான பொருள்களை வாங்கி தருவது, சடலங்களை ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வர உதவுவது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களோடு தொடர்பிலிருப்பது என பல வேலைகளை செய்வதாக கூறும் இவர், தன் பணி குறித்து அளித்திருக்கும் பேட்டியில், "இந்த மயானத்தில், நாளொன்றுக்கு 47 சடலங்கள் வரை அடக்கம் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் இங்கே 60 சடலங்கள் வருகின்றன. பெருந்தொற்றுக்கு முன்பு, நாளொன்றுக்கு 10 க்கும் குறைவான சடலங்களே வரும். இப்போது 6 மடங்கு அதிகமாக சூழல் இருக்கின்றது" எனக்கூறியுள்ளார்.
எரியூட்டப்பட வரும் சடலங்களில், பெரும்பாலானோருக்கு கொரோனா இருக்குமென்பதால், 15 - 20 நாள்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.
"இந்த இரண்டாவது அலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. கொரோனாவால் இறந்த குழந்தைகளை சுமந்து வரும் பாட்டி தாத்தாக்கள், தந்தையை எரியூட்ட வரும் டீனேஜ் குழந்தைகளையெல்லாம் அதிகம் பார்க்கமுடிகிறது. இதெல்லாம் பார்க்கும்போது, மனம் பதறுகிறது" என்றவர், தன்னால் முடிந்தவரை தான் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும், அதன்மூலம் தன்னிடமிருந்து பிறருக்கு கொரோனாவை பரப்பாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த மாதம், தன்னுடைய இரு நிலை கொரோனா தடுப்பூசியையும் பெற்றிருப்பதாகவும், அதனால் தான் மனதளவிலும் திடமாகவும் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.