காஷ்மீரில் பட்டப்பகலில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சவுரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சைஃபுல்லா காத்ரி (45). இவர் இரவுப் பணியை முடித்துவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். பின்னர் மதியம் 3 மணியளவில் தனது 9 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சைஃபுல்லா வெளியே சென்றார். அவரது மோட்டார் சைக்கிள் வீட்டு வாசலை கடந்ததும் அங்கு காரில் மறைந்திருந்த தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவரது தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரது மகளின் கையில் குண்டு பாய்ந்ததால் அவரும் மயங்கி கீழே விழுந்தார். பின்னர், அந்த தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பினர்.
இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், சைஃபுல்லாவையும், அவரது மகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சைஃபுல்லா காத்ரி உயிரிழந்தார்.
அவரது மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்திருப்பது காஷ்மீர் மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் கூறுகையில், "இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல். ஆயுதம் ஏதுமின்றி வீட்டில் இருந்த காவலர் மீது தீவிரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடும் பணியில் மாநிலம் முழுவதும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நிச்சயம் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார்கள்" என்றார். இதேபோல, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சமீபகாலமாக காவல்துறையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துடன் சேர்த்து நடப்பாண்டில் மட்டும் 7 போலீஸார் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.