கேரள மாநிலம் மூணாரை சேர்ந்த ஸ்ரீநாத் தனது வாழ்வாதாரத்திற்காக எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பள்ளிப் படிப்பை முடித்துள்ள இவர் தற்போது கேரளா தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். வாழ்வாதாரத்திற்கே போராடும் இவர் இத்தேர்வுக்கு தயாரான கதை சுவாரஸ்யமானது. கூலி வேலை செய்யும் இவருக்கு புத்தகத்தை புரட்டுவதற்கு ஏது நேரம்? கடுமையான வேலைகளை செய்து வரும் இவர் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இளைப்பாரவே சரியாக இருக்கும்.
இதற்கிடையில் இவர் தேர்வுக்கு தயாரான விதம் சற்று வித்தியாசமானது. தனது பணிகளுக்கு இடையே ஹெட்போனில் பாடங்களை கேட்டு இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். எர்ணாக்குளம் ரயில் நிலையத்தில் வைஃபை வசதி உள்ளது. இதனை ஸ்ரீநாத் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். ஆன்லைனில் டிஜிட்டல் பாடங்களை தனது பணிகளுக்கு இடையே கேட்டுகொண்டே பணியாற்றி வந்துள்ளார். இது சக ஊழியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக இருந்துள்ளது. இதனை எல்லாம் பொருட்படுத்தாத ஸ்ரீநாத், ஏழ்மை நிலையிலும் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அரசுப்பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீநாத், “அரசு தேர்வுக்கு மூன்று முறை விண்ணப்பித்தேன். ஆனால் இந்த முறைதான் ரயில்நிலையத்தில் உள்ள வைஃபை வசதியை பயன்படுத்தி தேர்வுக்கு தயாரானேன். ஹெட்போனில் பாடங்களை கேட்டவாறு சுமைகளை தூக்கிச்சென்றேன். மனதிற்குள்ளாகவே கேள்விகளுக்கான விடைகளுக்கு தீர்வு காண்பேன். இப்படிதான் நான் தேர்வுக்கு தயாரானேன். இரவு நேரங்களில் நான் காலையில் படித்ததை எல்லாம் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இலவச வைஃபை சேவை காரணமாக அதிகளவில் தனக்கு பணம் மிச்சமானதாக ஸ்ரீநாத் கூறுகிறார். இணையதளத்தில் டிஜிட்டல் புத்தகங்களை டவுண்லோட் செய்வதினால் என்னால் எந்தச் சிரமம் இன்றி படிக்க முடிந்தது. புத்தகங்கள் என்றால் அவற்றை தூக்கிச் செல்லவேண்டும். புத்தகங்களை படித்துக் கொண்டு சுமை தூங்கும் வேலையை எப்படி செய்ய முடியும் என்கிறார். நான் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். எனது வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. நிறைய தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். ஒரு நல்ல வேலைக்காக காத்திருக்கிறேன்.
கேரளா தேர்வாணையத்தின் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீநாத் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றால் நில அளவை துறையில் பணியில் சேர்க்கப்படுவார்.