சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை 14 வருடங்கள் கழித்து அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஷிவ் சிராஜித் ராம். இவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டார். காவல்துறையினர் இவரை கைது செய்ய தீர்மானித்ததும் தலைமறைவானார். அதன்பின் இவர் காவல்துறையினர் கைகளில் சிக்கவில்லை.
இந்நிலையில் பூரணநகர் பகுதியில் கூரிய முனைகள் கொண்ட ஆயுதத்தை ஏந்தி ஒருவர் இடையூறு தருவதாக கிடைத்த காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள் அங்கு தொல்லை கொடுத்து வந்தவரை கைது செய்தனர். கோட்வாலி காவல் நிலைய ஆய்வாளர் எல்எஸ் துருவே கைதான நபரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்துள்ளன.
கைதானவர் 2008 ஆம் ஆண்டு மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஷிவ் சிராஜித் ராம் என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஷிவ் சிராஜித் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்தோடு சேர்த்து ஆயுத தடுப்புச் சட்டத்தையும் பதிவு செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டில் குற்றம் இழைத்த நபர் 14 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் அவர் எங்கு இருந்தார்? அதே மாவட்டத்தில் தான் அவர் இருந்தார் என்றால் அவரை காவல்துறையினர் எப்படி கைது செய்யாமல் விட்டனர்? என்று பல கேள்விகள் எழும்பியுள்ளன.