மதமாற்றம் தொடர்பான வழக்கில் மனுதாரரையே நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி

மதமாற்றம் தொடர்பான வழக்கில் மனுதாரரையே நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி
மதமாற்றம் தொடர்பான வழக்கில் மனுதாரரையே நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி
Published on

’மதமாற்றம் தொடர்பான வழக்கில் பெயரையும் மாற்றி, மனுதாரரையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’நாடு முழுவதும் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (ஜனவரி 9) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன், ”இந்த மதமாற்ற குற்றச்சாட்டை தேசத் துரோக குற்றச்சாட்டாக கருத வேண்டும் என்று மனுதாரர் முன்வைக்கிறார். அவர் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவைச் சேர்ந்தவராகவும் இருக்கிறார்” என வாதம் வைத்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”இந்த விவகாரத்தில் அரசியலை கொண்டுவராதீர்கள்” என வழக்கறிஞர்களை அறிவுறுத்திய அவர்கள், “இதுபோன்ற விவகாரத்தை நீங்கள் அரசியலாக பார்க்கலாம்; ஆனால் நாங்கள் இதனை முக்கியமான வழக்காகத்தான் பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டனர்.

இதைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், ”இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடைய கருத்தையும் நிச்சயம் கேட்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 2002ம் ஆண்டு மதமாற்றங்களை தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அது 2006ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரர் அஸ்வினி உபாத்யா கூறியுள்ள அனைத்தும் அப்பட்டமான பொய். கட்டாய மதமாற்றம் தொடர்பாக முடிவெடுக்க மாநில சட்டமன்றத்திற்கு எதிராக எந்த ஒரு வழிகாட்டுதல்களும் இருக்க முடியாது. மாநில அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது.
மத்திய அரசுகூட அதில் எந்த தலையீடும் செய்ய முடியாது. மேலும் மாநிலங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் என்னென்ன சட்டங்கள் பொருத்தமானவை என்று அரசுக்குத் தெளிவாக தெரியும். மேலும், மாநில உரிமை இதுபோன்ற செயல்பாடுகளால் பறிக்கப்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் இந்த வழக்கு விவகாரத்தில் எங்களது கருத்தை கண்டிப்பாக நீதிமன்றம் கேட்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி நியமிக்கப்படுகிறார். அதேநேரத்தில் இந்த மனுவை கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான வழக்கு என்பதற்குப் பதிலாக ’மதமாற்றம் தொடர்பானது’ என மாற்றப்படுகிறது. மேலும், சர்ச்சையான மனுவை தாக்கல் செய்த பிரதான மனுதாரரான பாஜவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா இந்த வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com