பொதுமக்கள் பயணிப்பதற்காகதான் அரசாங்கம் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நடத்தி வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர், சில பயணிகள் பயணம் செய்வதை மறுத்து வருவது வேதனைக்குரிய செய்தி. இது போன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரில் தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்திற்கு 20 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் பயணம் செய்ய வந்துள்ளார். ஆனால், அவரை பார்த்த மெட்ரோ ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதுடன் அவரை மெட்ரோவில் பயணிக்க அனுமதிக்கவில்லை. இதைக்கண்ட பொதுமக்களில் சிலர் ஊழியர்களிடம் காரணத்தை கேட்கவும், ”எங்களுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு ஏதும் கிடையாது. ஆனால் சந்தேகிக்கப்படும் பயணி, மது போதையில் இருந்ததாலும், தனது சட்டை பட்டன்களை போடாமலும், அழுக்கு ஆடையும் அணிந்து இருந்ததால், இவரால் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதும் ஆபத்து வராமல் இருக்க தடுத்து நிறுத்தினோம்” எனக் கூறினார். ஊழியர்கள் கூறியதை, சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது X வலைதளத்தில் பதிவேற்றி பாஜகவின் எம்பியான தேஜஸ்வி சூர்யாவை டேக் செய்துள்ளார்.
அத்துடன், “ஆடையை காரணம் காட்டி சேவை மறுக்கும் சம்பவம் தற்போது என் கண்முன்னே நடந்துள்ளது. சட்டையின் இரண்டு மேல் பட்டன் போடவில்லை எனக் கூறி தொழிலாளி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நம்ம மெட்ரோ இப்படித்தான் இருக்கிறதா?” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு கர்நாடக விவசாயி ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணிக்க, ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததையும், அதனால் அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியும் மக்களுக்கு நினைவிருக்கலாம். அது போன்ற நிகழ்வு மீண்டும் பெங்களூரில் அரங்கேறியிருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.