குடியுரிமை திருத்தச் சட்டத்தை Citizen Amendment Act (CAA), மத்திய அரசு கடந்த மார்ச் 11ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தியது. 2014 டிசம்பர் 31க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.
இதற்கு எதிர்ப்பும் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இதில் விண்ணப்பிப்பதற்கான இணைய தளம் மற்றும் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசாங்கங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தேவைப்படும் ஒன்பது ஆவணங்களை அட்டவணை 1A பட்டியலிடுகிறது. இவை எதுவும் கிடைக்கவில்லை என்றால், ஒருவருக்கு என்ன தேவை என்று இந்தப் பிரிவு குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், மத்திய இணையமைச்சரான சாந்தனு தாக்கூர், ’சிஏஏ மூலமாக குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வேன்’ எனக் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, சிஏஏவை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தவிட மாட்டோம் என அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அம்மாநில பாஜக எம்பியும் மத்திய அமைச்சருமான சாந்தனு தாக்கூர், “பதிவு செய்யப்பட்ட சமூக அமைப்புகள் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் (பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் என்றால் என்ன என்பதை தாக்கூர் தெளிவுபடுத்தவில்லை) மூலம்கூட குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை வழங்குவோம். நான்கூட குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பேன். இருந்தபோதிலும் என்னுடைய பாட்டியின் அம்மா குடிபெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதனால் நான் விண்ணப்பிக்கத் தேவையில்லை. குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதால், எனக்கு வசதிகள் இல்லாமல் போய்விடுமா என்று பார்க்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
சாந்தனு தாக்கூரின் மூதாதையர்கள் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தன்னால் சிசிஏயின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். என்றாலும், அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“இந்திய குடிமகனாக இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் தங்கியிருக்கும் ஒருவருக்கு தேர்தலில் நிற்க பாஜக எப்படி சீட்டு வழங்கியது?” என்பது குறித்தும் “பங்களாதேஷைச் சேர்ந்த அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது எப்படி?” என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உட்பட பாஜக தலைமையும் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், "சாந்தனு தாக்கூர் இந்திய குடிமகனாக இருந்து, ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மீண்டும் குடியுரிமை கேட்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.