காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்

காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
Published on

சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சி செய்வதாகவும் கபில் சிபல் பேட்டியளித்துள்ளார்.

பல மூத்த தலைவர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வரும் நிலையில், பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். மே 16-ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் போட்டியிடுவதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்கோபால் யாதவ் ஆகியோர் முன்னிலையில் கபில் சிபல் லக்னோ நகரில் தனது மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கபில் சிபல் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் ஜி-23 என அழைக்கப்பட்ட அதிருப்தி தலைவர்களின் குழுவில் முக்கிய அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காது என அவரது ஆதரவாளர்கள் கருதிய நிலையில், கபில் சிபல் கட்சியைவிட்டு வெளியேறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் இடையே மோதல் ஏற்பட்டபோது, கபில் சிபல் அகிலேஷ் யாதவின் வழக்கறிஞராக செயல்பட்டார். தேர்தல் ஆணையத்தில் அகிலேஷ் யாதவ்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் எனவும் சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்கே என கபில் சிபல் வெற்றிகரமாக வாதாடினார். தேர்தல் ஆணையத்தின் முடிவை தொடர்ந்து, தனது தந்தையின் சகோதரான சிவபால் யாதவை ஓரம்கட்டி அகிலேஷ் யாதவ் முழுவதுமாக சமாஜ்வாதி கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசாம் கானுக்கும் வழக்கறிஞராக கபில் சிபல் செயல்பட்டு வருகிறார்.

கபில் சிபல் மாநிலங்களவையில் சிறப்பாக செயல்படுவார் என, அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். பிரபல வழக்கறிஞரான கபில் சிபல் உத்தரப்பிரதேசத்தின் பிரச்னைகளுக்கு குரல்கொடுப்பார் என்றும், சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் அவர் வெற்றிபெறுவது உறுதி எனவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

தொடரும் ராஜினாமாக்கள் :

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் சமீபத்தில் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில் கபில் சிபல் தற்போது வெளியேறி உள்ளார். பஞ்சாப் மாநில பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த சுனில் ஜாக்கர் சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே உத்தரபிரதேச மாநிலத்தில் ஜிதேன் பிரசதா மற்றும் ஆர்.பி. என். சிங் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். அதற்கு முன்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாரதிய ஜனதாவில் இணைந்து தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.

காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இப்படி மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் பாரதிய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதிலும் தொடர் தலைமை குழப்பங்கள் காரணமாக தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றி காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு தோல்வியை அளித்துள்ளது. 2019 ஆம் வருடத்திலேயே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு ராகுல் காந்தி தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவி ஏற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்தார் என்றாலும் கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் காந்தி குடும்பத்தை சேராத ஒருவருக்கு தலைவர் பதவி தரவேண்டும் எனவும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தரவேண்டும் எனவும் பல்வேறு விதமான கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் தலைமை பரிசீலனை செய்து வருகிறது. பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி காந்தி குடும்பத்தை சேராத ஒருவருக்கு தலைவர் பதவியை அளிக்க வேண்டும் எனவும் இப்போதிலிருந்தே திட்டமிட்டு 2024 மக்களவை தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தேர்தல் வியூகம் வகுக்க தனக்கு சுதந்திரம் தேவை எனவும் அதற்கான அதிகாரத்தை காங்கிரஸ் கட்சித் தலைமை அளிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சி அளிக்க முன்வந்த பொறுப்பை, பிரசாந்த் கிஷோர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகாரம் இல்லாமல் தேர்தல் பணிகளை நடத்துவது கடினம் என அவர் கருதியதால், காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவை கைவிட்டார்.

பின்னர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரத்தில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் 2024ம் வருடத்திற்கான மக்களவை தேர்தல் குறித்த திட்டங்கள் தீட்ட குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது ஹர்திக் பட்டேல் மற்றும் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com