40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு

40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு
40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு
Published on

இந்தியாவில் நுகர்வோர் செலவினம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக 2017-18 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ‘Business standard' செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் ‘வீட்டு நுகர்வோர் செலவு' என்ற தலைப்பில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், “கடந்த 2011-12-ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழித்த செலவு ரூ.1,501 ஆக இருந்தது. ஆனால் அதுவே 2017-18 ஆம் ஆண்டில் தனிநபர் மாத செலவு ரூ.1446 ஆக இருந்தது. இது 2011-12-ஐ ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் குறைந்துள்ளது. 

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவில் சாப்பிடுவதற்காக செலவு செய்யும் தொகையும் குறைந்துள்ளது. இது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த பிரச்னைகளை எழுப்புவதோடு, கவலைக்குரிய போக்காகவும் பார்க்கப்படுகிறது.

கிராம புறங்களில் 2011-12 ஆம் ஆண்டில் உணவிற்கான தனிநபருக்கு செலவு ரூ. 643 ஆக இருந்தது. ஆனால் 2017-18-ஆம் ஆண்டில் ரூ.580 ஆக குறைந்துள்ளது. இது 2011-12-ஐ ஒப்பிடுகையில், 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் நகர்புறங்களில் பெரிதாக மாற்றமில்லை. 2011-12 ஆம் ஆண்டில் மாதம் தனிநபருக்கு உணவிற்கான செலவு ரூ. 943 ஆக இருந்தது. 2017-18-ல் ரூ. 946 ஆக உள்ளது. 

கிராமப்புற மக்கள் பால் மற்றும் அது தொடர்புடைய தயாரிப்புகளைத் தவிர உணவுப் பொருட்களுக்கான செலவைக் குறைத்துள்ளனர். நகர்ப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள், அத்தியாவசிய சமையல் பொருட்களுக்கான செலவினங்களைக் குறைக்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2018 ஜூன் வரை நடத்தப்பட்டது. இதுகுறித்த அறிக்கையை 2019-ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி வெளியிட அக்குழு அனுமதி வழங்கியது. எனினும் பாதகமான கருத்து எழும் என்பதால்தான் அறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com