அரசியலமைப்பு சட்டம் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ரங்ஷர்தா ஹோட்டலில் சிவசேனா தங்க வைத்துள்ளது.
இந்நிலையில் அரசியலமைப்பு சட்டம் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ பாஜகவிடம் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் இருந்தால் ஆட்சியமைக்கட்டும். இல்லையென்றால் அதனை ஒத்துக்கொள்ளுங்கள்.
அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கானது. அது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல. அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் நன்கு அறிவோம். அதன்படி மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதலமைச்சராக்குவோம்” எனத் தெரிவித்தார்.