ராஜஸ்தானில் பற்றி எரிந்த கட்டடத்திற்குள் தீரத்துடன் சென்று குழந்தையை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ராஜஸ்தானின் கராவ்லி பகுதியில் சில நாட்களுக்கு முன் மதக்கலவரம் ஏற்பட்டது. அப்போது கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்ட காவலர் நேத்ரேஷ் சர்மா, உயிரை துச்சமெனக் கருதி அதற்குள் சென்றார். உள்ளே சிக்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை காவலர் நேத்ரேஷ் பத்திரமாக மீட்டு வந்தார். மேலும் 4 பேரையும் கலவரத்திலிருந்து அவர் பாதுகாப்பாக மீட்டார்.
இவர் குழந்தையை காப்பாற்றும் புகைப்படம், இணையதளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகின்றது. அதைத்தொடர்ந்து காவலர் நேத்ரேஷை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவுகளும் குவிந்து வருகின்றன. மட்டுமன்றி காவலர் நேத்ரேஷின் செயலுக்காக அவைரை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பாராட்டியதுடன் தலைமைக் காவலராக பதவி உயர்வும் தந்து கௌரவித்துள்ளார்.