- சண்முகப்பிரியா
கடந்த 1988ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கலைமானை வேட்டையாடியதாக சல்மான்கான், நடிகர் சயிஃப்அலி கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சல்மான் கானை குற்றவாளி என்று உறுதி செய்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் மற்ற நால்வரையும் விடுவித்தது.
ஆனாலும் அவர் வேட்டையாடிய மானை தங்களது சமூக சின்னமாக கருதும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், டெல்லியை சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தங்களது புனித சின்னத்தை அவமதித்து விட்டதாகக் கூறி அவரை கொன்றே தீருவேன் என்று தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
பல முறை மிரட்டல் விடுத்த நிலையில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய சாகர் மற்றும் விக்கி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் சல்மான் கானின் பன்வெல் என்னும் இடத்தில் உள்ள பண்ணை வீட்டை தாக்க சதி நடப்பதாக பன்வெல் இன்ஸ்பெக்டர் நிதின் தாக்கரேயிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் அஜய் கேஸ்யப், கௌரவ் பாட்டியா, வஸ்பி கான், ஜாவேத் கான் ஆகியோரைக் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் என்பதும் ஏற்கனவே சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு செல்லும் போது காரை மறித்து கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் ,அந்த திட்டம் வெற்றி பெறாத காரணத்தால் சல்மான் கான் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக நவி மும்பையில் வசிக்கும் காஷ்யப் என்பவர் இருந்துள்ளார். இதற்காக அவர்கள் ரயில் நிலையம், பஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சந்தித்து, தங்களது திட்டம் குறித்து விவாதித்துள்ளனர். ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாக காஷ்யப், பிஷ்னோய் உள்ளிட்டோருடன் உடன் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.
சல்மான் கானை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட அதிநவீன துப்பாக்கிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளனர். மும்பையில் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு லாரன்ஸ் பிஷ்னோயின் அறிவுரைப்படி கடந்த பிப்ரவரியில் இருந்து கிட்டத்தட்ட 20 பேர் வரை பன்வெல் பகுதியில் தங்கியிருந்து சல்மான் கான் வீட்டை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். தாக்குதல் நடத்த சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த இவர்கள், சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டவுடன் பன்வெலில் இருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.
மேலும் அனைவரும் கன்னியாகுமரியில் சந்தித்து அங்கிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் அவர்களை போலீசார் கைது செய்தது. தற்போது வரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிரபல நடிகரை கொலை செய்ய பாகிஸ்தானில் இருந்து துப்பக்கி வாங்கத் திட்டம் தீட்டியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.