இறுதிகட்டத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் சட்டப்பேரவைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு மயுர்பஞ்ச், பாலாசோர் (Mayurbhanj & Balasore) மக்களவைத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து அவரது நலம் விரும்பிகள் வருந்துவதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், “கடந்த ஓராண்டில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சதி உள்ளதா? நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் என்ன என்பது பற்றி அறியும் உரிமை ஒடிசா மக்களுக்கு உள்ளது. ஒட்டுமொத்த ஒடிசா மக்களும், ஒடியா பேசும் முதலமைச்சரே வேண்டும் என விரும்புகின்றனர். 25 ஆண்டுகால பிஜூ ஜனதா தள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்” கூறினார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் கைகள் நடுங்கும் காட்சிகளை வெளியிட்டு அங்கு பாஜக தலைவர்கள் பரப்புரை செய்யும் நிலையில், இதற்கு நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார். செல்லும் இடமெல்லாம் தனது நண்பர் என தன்னைக் குறிப்பிடும் பிரதமர் மோடி, தன்னை தொலைபேசியில் அழைத்து உடல்நலம் குறித்து பேசலாமே என நவீன் பட்நாயக் வினவியுள்ளார். ஆனால், பாஜக தலைவர்கள் தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதிலேயே கவனமாக இருப்பதாகவும் கடந்த ஒருமாத காலமாக நல்ல உடல்நிலையுடன் தாம் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும் பதில் அளித்துள்ளார்.