‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ - காஷ்மீரில் Z+ பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத் மோசடி நபர்!

‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ - காஷ்மீரில் Z+ பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத் மோசடி நபர்!
‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ - காஷ்மீரில் Z+ பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத் மோசடி நபர்!
Published on

பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி காஷ்மீரில் இசட் பிளஸ் (Z PLUS) பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் பாய் பட்டேல் என்பவர், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக (Additional Director for strategy and campaigns) பணியாற்றுவதாகக் கூறி, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் உள்பட பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வந்ததாகத் தெரிகிறது. அந்த வகையில், கடந்த மாதம் முதல் முறையாக காஷ்மீருக்கு சென்ற அவர், அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர் என்று கிரண் பாய் பட்டேல் கூறியதால், காஷ்மீரில் 5 நட்சத்திர விடுதியில் தங்கவைத்து, குண்டு துளைக்காத ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காரும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக இசட் பிளஸ் பாதுகாப்பும் கிரண் பாய் பட்டேலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், துணை ராணுவ படையினர் புடைசூழ பல இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், இந்த தகவலை ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அலவலக பயணம் என்று ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் கிரண் பாய் பட்டேல் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இவரது ட்விட்டரை குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளர் பிரதிப் சிங் வாகேலா உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் பின்தொடர்பவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் 2 வார இடைவெளியில் மீண்டும் அவர் ஸ்ரீநகருக்கு வந்ததால் சந்தேகமடைந்த மாவட்ட ஆட்சியர், போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் எச்சரிக்கையான உளவுத்துறை அமைப்பு, பிரதமர் அலுவலகம் மற்றும் கிரண் பாய் குறித்து விசாரித்துள்ளது.

இதற்கிடையில் இரண்டு முறை ஸ்ரீநகர் சென்ற நிலையில், 3-வது முறையாக கடந்த 3-ம் தேதி கிரண் பாய் மீண்டும் அங்கு சென்றுள்ளார். அப்போது போலீசாரால் கிரண் பாய் பட்டேல் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் கிரண் பாய் பட்டேல் என்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எப்போது கிரண் பாய் பட்டேல் கைதுசெய்யப்பட்டார் என்று போலீசார் சரியான தகவல் சொல்லவில்லையென்றாலும், 10 நாட்களுக்கு முன்னர் அவர் கைதுசெய்யப்பட்டதும், இந்த விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரகசியமாக வைத்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் கிரண் பாய் பட்டேல் ஆஜர்படுத்த வந்தபோது தற்போது இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

மேலும், கிரண் பாய் பட்டேலின் ட்விட்டர் பயோவில், விர்ஜினியாவில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படித்ததாகவும், திருச்சி ஐஐஎம்-ல் எம்பிஏ உடன், எம்டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.இ. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com