ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சிக்காரர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் அக்கட்சி அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்க்ள் அவரை மீட்டனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமாவை திரும்ப பெறவில்லை என்றால் நான் என்னை மாய்த்து கொள்வேன் என தெரிவித்தார்.
ராகுல்காந்தியின் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தி அக்கட்சியில் அலுவலகம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருவர் இந்த தற்கொலை முயற்சியை எடுத்துள்ளார்.
முன்னதாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மையை பிடித்து பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்பதாக கூறி அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவிப்பு வெளியிட்டு ராஜினாமா கடிதத்தையும் வழங்கியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பல மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி வருகின்றனர்.