ராஜஸ்தான் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான உள்கட்சி பூசல் காரணமாக, குறிப்பாக முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல் கட்சிக்கு தேர்தலில் பெரும் பாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இச்சூழலில் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்கள்.
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அசோக் கெலாட் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தான் மாநிலம் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் ராஜஸ்தானில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை காங்கிரஸ் கட்சியை கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஒட்டுமொத்த ராஜஸ்தானின் பலதரப்பட்ட சமூக மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ராஜஸ்தானின் தற்போதைய நிகழ் காலமும் எதிர்காலமும் காங்கிரஸ் கையில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.