ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ள கேரள சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணிக்கு இடையே ஒரு முக்கியமான போராட்டமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் இரு கட்சிகளும்தான் இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்த முறை தேர்தல் களம் ஒவ்வொரு கட்சிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதனை சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
இரண்டுமுறை ஆட்சி என்ற சாதனையை படைக்குமா கம்யூனிஸ்ட்?
சிபிஐ (எம்) பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான். இதனால் இந்தத் தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இடதுசாரிகள் அழிக்கப்படுவதைக் குறிக்கும். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் ஆளும் எல்.டி.எஃப் அரசு கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுவும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள், ஊழல் பிரச்னைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்.டி.எஃப் கூட்டணிக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. தவிர, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எல்.டி.எஃப் தனது ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க பல பணிகளை மேற்கொண்டுள்ளது. அது வரும் தேர்தலில் கைகொடுக்கலாம்.
இதுபோக, 2009-ல் காங்கிரஸின் யுடிஎஃப்-க்கு மாறிய ஜே.டி (எஸ்)-இன் ஒரு பிரிவு தற்போது மீண்டும் எல்.டி.எஃப் கூட்டணிக்கு திரும்பியுள்ளது. மேலும், கடந்த நான்கு தசாப்தங்களாக யுடிஎஃப் உடன் இருந்த பிராந்திய கிறிஸ்தவ கட்சியான கேரள காங்கிரஸ் (எம்) வழக்கத்திற்கு மாறாக எல்.டி.எஃப் உடன் இணைந்துள்ளது. மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பலமாக இருக்கும் இக்கட்சி கம்யூனிஸ்ட் உடன் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். ஒருவேளை மீண்டும் ஆளும் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இரண்டுமுறை ஆட்சி அமைத்த முதல் கேரள கட்சி என்ற பெருமையை எட்டும்.
ஆட்சிக்கட்டிலில் அமருமா காங்கிரஸ்?
காங்கிரஸைப் பொறுத்தவரை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி அடைய நேர்ந்தால், அது கட்சியின் மாநில அலகு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், அது பாஜக தற்போது செய்து வரும் 'காங்கிரஸ் இல்லாத கேரளா’' இலக்குக்குத் தீவனமாக மாறும் என்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான், சட்டப்பேரவைத் தேர்தலை முக்கியமாகக் கருதி, அதற்கான வேலைகளை காங்கிரஸின் டெல்லி தலைமை கையில் எடுத்துள்ளது.
பாஜகவை திறம்பட எதிர்கொள்வதற்கும், மாநிலத்தில் உள்ள 30 சதவிகிதம் வசிக்கும் முஸ்லிம் வாக்குகளை தங்களுக்கு மடைமாற்றவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அதற்குத் தகுந்த பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறது காங்கிரஸ். சபரிமலை பிரச்னை, கேரள கடலில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆழ்கடல் பயணிகளை அனுமதிக்க ஆளும் எல்.டி.எஃப் முடிவெடுத்ததாகக் கூறப்படும் முடிவின் சமீபத்திய சர்ச்சை ஆகியவற்றை ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக பிரசாரங்களில் முழங்க தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்.
இதைவிட முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பின் மீண்டும் உம்மன் சாண்டியை 'ஆக்டிவ் பாலிட்டிக்ஸ்' செய்ய களமிறக்கி உள்ளது. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவரை, தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மீண்டும் அழைத்து வந்துள்ளது.
ஆனால், இதுநாள் வரை தங்கள் கட்சிக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகளை கொண்டுவந்த கே.எம்.மாணியின் கேரளா காங்கிரஸ் இல்லாதது கட்சிக்கு வீழ்ச்சிக்கு வழிவகுக்க கூடிய ஒரு விஷயம். இதனால் யு.டி.எஃப் அதன் பாரம்பரிய வாக்கு வங்கியான கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தனது கன்ட்ரோலில் வைத்திருக்க போராடி வருகிறது. வழக்கம்போல், சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகியவை மதச்சார்பற்ற வாக்குகளை வெல்ல ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் இரு கட்சிகளும் இருக்கின்றன. இதனால், இரண்டு மாதங்கள் முன்பே தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கிடையில் பாஜக, 2016 தேர்தலில் ஓர் இடத்தை வென்றது. அப்போதைய தேர்தலில் இந்து கட்சியான பாரத் தர்ம ஜனசேனா (பி.டி.ஜே.எஸ்) உடன் போராடிய ஏழு இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பி.டி.ஜே.எஸ் பிளவுபட்டு அதன் நீரோட்டத்தை இழந்துள்ளது. ஆனால், பாஜக அதற்கு மாற்றாக கேரளாவில் வளர்ந்துள்ளது. சில விஷயங்களை திறம்பட கையாண்டதில் கட்சி ஓரளவுக்கு மாநிலத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேபோல் சமீபத்திய மாதங்களில் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் போன்ற பல பிரபலமான நபர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். என்றாலும், அவர்கள் வாக்காளர்களில் ஒரு பகுதியை பாஜகவுக்கு கொண்டு வர முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சிப் பேரணியில் உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், "அரசாங்கத்தை மதிப்பீடு செய்வது மக்கள்தான். எல்.டி.எஃப்-ஐ பொறுத்தவரை, வளர்ச்சி என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான ஒன்றாகும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சி மக்களை அவமதித்துள்ளது" என்றார். மேலும் தேர்தலுக்கு தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ``கையூட்டு மற்றும் ஊழல்களில் சிக்கியுள்ள எல்.டி.எஃப் அரசாங்கத்திற்கு எதிராக கேரள மக்கள் யு.டி.எஃப்-க்கு பின்னால் அணிதிரள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றுள்ளார்.
ஒவ்வொரு கட்சிகளும் கிட்டத்தட்ட தற்போது வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கின்றன. இதனால் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.
- மலையரசு
தகவல் உறுதுணை: The Indian Express