பிரித்தாளும் முயற்சிகளை முறியடிப்போம் என்றும், வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிப்பதாகவும், 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்பட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் மக்கள், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், வகுப்புவாத வன்முறைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை, மொழியை பயன்படுத்தி பிரச்னையை தூண்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள் கவலை அளிப்பதாகவும் தலைவர்கள் கூறியுள்ளனர். மதரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து அமைதியை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரத்தில், வெறுப்பு பேச்சை தூண்டுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்தியாவின் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்த உறுதி எடுத்துக்கொள்வதாகவும், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் நச்சுத் தத்துவங்களை எதிர்த்து ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவோம் என உறுதியேற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.