மணிப்பூரில் வன்முறை காரணமாக தொடர்ந்து பதற்றம் நிலவிவருவதால், கூடுதலாக பாதுகாப்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி பழங்குடியினர் 6 பேரின் உடல்கள் ஜிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மணிப்பூரில் மீண்டும் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. பல்வேறு இடங்களில் மெய்தி பழங்குடியினர், அவர்களது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கூடுதலாக 50 பட்டாலியன் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். வன்முறை காரணமாக மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும்” என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “மணிப்பூர் விவகாரம் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவேண்டும். மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு, மணிப்பூருக்கு செல்ல மட்டும் நேரமில்லையா?. வன்முறைக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என வலியுறுத்தினார்.