முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தவர்கள் தற்போது ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற பிரதமர் மோடியை டாடி என்று அழைக்கிறார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத இடத்தில், 'மோடிதான் எங்களுக்கு டாடி', 'இந்தியாவின் டாடி' என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 95 சதவிகிதம் வரை பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடிந்து விட்டதாகத் தெரிவித்தார். வருகிற 13ம் தேதி கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி பொதுக் கூட்டத்திற்கு வருவதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவற்றை மறைக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருவதாகவும் கூறினார்.
தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்ட போதும், கஜா புயல் ஏற்பட்டபோதும் மக்களைச் சந்திக்காத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்கு அடிக்கடி தமிழகம் வருகிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தவர்கள் தற்போது ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற பிரதமர் மோடியை டாடி என்று அழைக்கிறார்கள் என சஞ்சய் தத் விமர்சித்தார்.