எடியூராப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை தொடங்கியது.
கர்நாடகாவில் முதலமைச்சராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அமைச்சர்கள் இல்லாமல், எடியூரப்பா மட்டும் நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 15 நாட்களில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அவசர வழக்காக இரவே விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் வழக்கறிஞர் அபினேஷ் சிங்வி வலியுறுத்தினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வீட்டில், பதிவாளர் ரவீந்திர மைத்தானி இதுதொடர்பாக அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
அதன்படி, ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. மத்திய அரசு சார்பாக துஷர் மேத்தாவும், மனுதாரர்கள் சார்பில் அபிஷேக் சிங்வியும் வாதாடி வருகின்றனர். உச்சநீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடைபெற்று வருகிறது.