காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் அக்டோபர் 17ல் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 24 முதல் 30ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம், தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், ‘’ ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும் ‘’ என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்வை மறைமுகமாகச் சாடியுள்ளார் ராகுல் காந்தி.
மேலும், காங்கிரஸின் தலைவர் பதவியானது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, இது வெறும் கட்சி பதவி இல்லை. நம் கொள்கைகளைக் கடைப்பிடிக்க ஊக்கப்படுத்தும் பதவி. நம் நாட்டின் பெருமையை உணர்த்தக் கூடியது. உதய்பூரில் நடந்த கட்சி கூட்டத்தில் தான் ஒருவருக்கு ஒரு பதவி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் ‘’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி நிலைப்பாடு சரியா?
தலைவர் பதவியை முன்னாள் தலைவர் ராகுல் ஏற்க வேண்டும் என, பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதை அவர் நிராகரித்துள்ளார். 'நானோ, தன் குடும்பத்தாரோ, தலைவர் பதவிக்குப் போட்டியிட மாட்டோம்' என உறுதியாக கூறிவருகிறார். இதனால், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு ராகுல் வழி விடுவது தார்மீக ரீதியாகச் சரியென்றாலும் கூட இந்நிய அளவில் காங்கிரஸ் கட்சியின் மொத்த முகமாக ராகுல்காந்தி தான் இருக்கிறார் என்பது தான் கள யதார்த்தம். கள யதார்த்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வேற வழியில் செல்வது நல்ல பலனைக் கொடுக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அசோக் கெலாட் VS சசி தரூர் ?
சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் போட்டியிடவில்லை என்ற சூழலில் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்படப் பலர் தலைவர் பதவிக்கு ஆர்வமாக உள்ளனர். 9,000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் வாக்களித்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். அதன்படி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர்களான திக் விஜய் சிங், கமல்நாத், மூத்த தலைவர் மணீஷ் திவாரி என தலைவர் பதவிக்குப் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் மூத்த தலைவரும் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட்டும் விரும்பம் தெரிவித்தார். இறுதியாக அசோக் கெலாட் மற்றும் சசி தரூருக்கும் இடையே தான் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் கெலாட்டின் பிடிவாதம்..
தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்களில் அதிக ஆதரவை பெற்றியிருப்பவர் அசோக் கெலாட் தான். தொடக்கத்தில் சோனியா காந்தியின் ஆரதவும் இவருக்குத் தான் இருந்தது. காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுத்தரப்போவதில்லை என அசோக் கெலாட் பிடிவாதமாகவும் இருப்பது தான் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான், ‘ ஒரு நபருக்கு ஒரு பதவி என்று ராகுல் காந்தி, அசோக் கெலாட்டுக்கு மறைமுக செய்தி கூறியிருந்தார். இதனை அடுத்து, தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ள மூத்த தலைவர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நிர்ப்பந்தம் சூழ்ந்துள்ளது. ஒரு வேளை அடுத்த சில நாட்களில், அசோக் கெலாட் தலைவர் பதவிக்காக, தனது முதல்வர் பதவியை ராஜினமா செய்தால், அடுத்த ராஜஸ்தான் பதவிக்கு யாருக்கு என்ற கேள்வியும் வலுத்துள்ளது.
அடுத்த முதல்வர் சச்சின் பைலட்?
2018-ல் நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சின் பைலட்டின் கடும் உழைப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் முதல்வர் பதவியை , மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கொடுத்தது காங்கிரஸ் தலைமை. இதனால் அசோக் கெலாட்டுடனும், கட்சித் தலைமையுடனும் தொடர்ந்து அதிருப்தியைத் தெரிவித்து வந்தார் சச்சின் பைலட்.
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவைத் பாஜக தன் பக்கம் கொண்டு வந்து காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தது போல், சச்சினை பைலட்டையும் தங்களது பக்கம் கொண்டுவர பாஜக எண்ணியது. அதற்கான முயற்சிகளையும் பாஜக தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக காங்கிரஸ் தலைமை, ஒருவழியாக சச்சினை பைலட்டை சமாதானப்படுத்தியது என்றாலும் கூட சச்சினை பைலட்னின் அதிருப்தி தொடர்ந்துகொண்டே தான் உள்ளது. தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ள மூத்த தலைவர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நிர்ப்பந்தம் இருக்கும் நிலையில் அந்த முதல்வர் பதவி தற்போதாவது தன் பக்கம் வருமா என சச்சின் பைலட் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? ராகுல்காந்தி போகும் பாதை காங்கிரஸுக்கு நல்ல வழியைக் காட்டுமா? பாஜக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதெல்லாம் அடுத்தடுத்த வாரங்களில் தெரியவரும்.