”உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்காதது ஏன்?" - ராகுல் காந்தி கேள்வி

”உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்காதது ஏன்?" - ராகுல் காந்தி கேள்வி
”உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்காதது ஏன்?" - ராகுல் காந்தி கேள்வி
Published on

வேளான் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்களை மத்திய அரசு ஏன் சேகரிக்கவில்லை என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, 503 உயிரிழந்த விவசாயிகளின் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பட்டியல் ஒன்றை தயாரித்து இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி தெரிவித்தார்.

விவசாயிகள் உயிரிழப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். "மத்திய அரசு தவறான சட்டங்களை அமல்படுத்தியதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி சட்டங்களை ரத்து செய்து மன்னிப்பு கோரியுள்ளார். அப்படியிருக்க உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்காதது ஏன்," என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மனிதாபிமான அடிப்படையில் விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்தபோது, பிரதமர் மோடி அந்த சட்டங்களின் நலன் என்ன என்பதை விவசாயிகளுக்கு விளக்குவதில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் பேசியிருந்தார். ஆனால் ராகுல் காந்தியோ சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார் என மீண்டும் மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்.

"உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்கள், அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய குழந்தைகள், அவர்களுடைய கல்வி, குடும்பத்தாரின் ஆரோக்கியம், ஆகியவற்றை எண்ணி மனிதாபிமான அடிப்படையில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்," என ராகுல்காந்தி விளக்கினார். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யும் என மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் விமர்சனம் செய்தார்.

"மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் போது, பணம் இல்லை என அரசு சொல்கிறது. ஆனால் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது," என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு ஆதரவான இந்தக் கோரிக்கையை அரசு தொடர்ந்தது வலியுறுத்தல் என அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் 403 போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார். அந்தப் போராட்டத்துக்கு பஞ்சாப் அரசு காரணம் அல்ல என்றாலும் மனிதாபிமான அடிப்படையிலேயே நஷ்டஈடு அளிக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கினார். ஒரு தவறும் செய்யாத பஞ்சாப் அரசு நஷ்ட ஈடு அளித்திருக்கும் நிலையில், போராட்டத்துக்கு மூல காரணமாக இருந்த மத்திய அரசு நஷ்ட ஈடு அளிக்க மறுப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com