டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பியதால், தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகள் போர்களம் போல காட்சியளித்தன. வன்முறையில் 47 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நாடாளுமன்ற மக்களவை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் உரத்த குரலில் வலியுறுத்தினர்.
மேலும் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி நோட்டீஸும் வழங்கினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், காங்கிரஸ் எம்பிக்கள் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும், அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்த பதாகைகளையும் கைகளில் ஏந்தியபடி, பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
இதனால், ஆவேசமடைந்த பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று அவர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அவையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து முதலில் மாலை 3 மணி வரையிலும், பின்னர் மாலை 4 மணி வரையிலும் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
மாநிலங்களவையிலும் அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், அங்கும் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி அவர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர்.