ஹரியானா மாநிலாத்தில் அடுத்த மாதம் 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும், மாநில முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய எம்.பி.யுமான குமாரி செல்ஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.
இந்தச் சூழலில் தேர்தல் பிரசாரத்தில் இருந்து குமாரி செல்ஜா விலகியிருப்பது அங்கு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா பேரவைத் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு குறைந்த இடமே ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையைத் தீர்க்க கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பிரச்னையில் எரியும் நெய்யில் மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாக, பாஜக மேலும் பிரச்னையைத் தூண்டிவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், ”குமாரி செல்ஜா பாஜகவில் சேருவார், சுயமரியாதை உள்ள எந்தவொரு நபரும் இந்த சூழ்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பரிசீலிப்பார்' என்று கூறி பாஜகவில் சேர அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அதுபோல் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “குமாரி செல்ஜா கவனமாக இருக்க வேண்டும். கட்சி அவரை அவமானப்படுத்தியது” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் அக்கட்சியில் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் பாஜகவின் இந்த அழைப்புக்கு குமாரி செல்ஜா பதிலடி கொடுத்துள்ளார். அவர், “பாஜக தலைவர்கள் எனக்கு அறிவுரை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. கட்சியை மேம்படுத்தும்பொருட்டு சில உள் விவகாரங்கள் தீர்க்கப்பட்டு வருகிறது. கட்சிக்குள் எப்போதும் சில விவாதங்கள் இருக்கும். அதை வெளியில் சொல்ல முடியாது. கட்சி முன்னேறும் வகையில் சில முடிவுகளை எடுப்பதில் இதுவும் ஒரு பகுதியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குமாரி செல்ஜா வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி நர்வானா பகுதியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுரேஜ்வாலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் காங்கிரஸின் உட்கட்சி பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக, குமாரி செல்ஜா முன்னதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.