நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் விசாரணை நடைபெற்றநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தப் போராட்டத்தில் கைது நடவடிக்கையின்போது காவல் துறையினர் தனது ஆடையை கிழித்ததாக எம்.பி. ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.
சோனியாவிடம் விசாரணை நடத்தப்பட்ட 3 நாட்களும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்றபோது எம்.பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் அனைவரும் விஜய் சவுக்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், தடையை மீறி குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தபோது, காவல் துறையினர் தனது ஆடையை கிழித்ததாக எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டினார். இதற்கு பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.