முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை கிடையாது - காங். எம்.எல்.ஏ போர்க்கொடி

முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை கிடையாது - காங். எம்.எல்.ஏ போர்க்கொடி
முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை கிடையாது - காங். எம்.எல்.ஏ போர்க்கொடி
Published on

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை அடுத்த பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் எதுவும் இல்லை என்று கூறியும், அவசர உதவிக்கு ஆம்புலன்சை இயக்க டீசல் கூட போட இயலாத நிலை இருப்பதாகவும் கூறி, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ தனவேலு, “புதுச்சேரியில் அரசு நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக சீர்குலைந்து விட்டது. ஆளுநர் மீது குற்றம் சுமத்தி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தப்பிக்க பார்ப்பதால், மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை முதல்வரால் தடுக்க முடியாமல், அதற்கு உடந்தையாக இருக்கிறார்.

முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை கிடையாது. ஆட்சி நடத்த முடியவில்லை என்றால், தானாக முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். தன்னை போன்று மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை இல்லை என்று கூறி, அவரை பதவி விலக கூறியிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com