பஞ்சாப் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததன்மூலம், நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் மாதம் 7-ம் தேதி வரை சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களைவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளநிலையில், இந்தத் தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்பட்டது.
இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. கொரோனா ஊரடங்கு, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார மந்தம், சிறுபான்மையினர் மீது தாக்குதல், சீனாவை சரியாக கையாளாதது, நடுத்தர மக்களின் மீதான வரிச் சுமை, மதச் சாயம், மாநிலக் கட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் ஆளும் மத்திய பாஜக அரசு மீது முன்வைத்து 5 மாநில தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது.
சுதந்திர இந்தியாவில் எந்தவித வளர்ச்சிக்கும் பாடுபடாமல், வாரிசு அரசியலில் மட்டுமே ஆர்வம் காட்டியதாக காங்கிரஸ் மீது பாஜக குற்றஞ்சாட்டியது. இதனால், 5 மாநில தேர்தல் முக்கியமாக கருதப்பட்டநிலையில், 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. பல வரலாறுகளை கொண்ட காங்கிரஸ் கட்சி, பஞ்சாப்பில் சிறிய கட்சியான ஆம் ஆத்மியிடம் வீழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலிதள், பாஜக ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன.
விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடி எதிர்ப்பு, காங்கிரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த முதல்வர் வேட்பாளர் என பஞ்சாப்பில் பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி பரபரப்பு நிலவிவந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை படுமோசமாக இழந்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலுமே முன்னிலையில் உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் பஞ்சாப் உள்பட 3 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி புரிந்து வந்தது. தற்போது இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தன் மூலம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான ஆம் ஆத்மி கட்சியும், தற்போது 2 இடங்களில் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்தியாவில் இந்த இரு கட்சிகளும் சமமாக ஆட்சியை பிடித்துள்ளன. டெல்லியில் ஏற்கனவே ஆட்சியில் உள்ளநிலையில், தற்போது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் மட்டுமே காங்கிரஸ் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.