காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வரும் அவர், மத்திய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
‘ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வருகிறார்’ என பாஜக தலைவர்கள் ஒருபுறம் குற்றம்சாட்டி வந்தாலும், பாஜக அரசின் மீதான விமர்சனத்தை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார் ராகுல்.
இந்நிலையில், இந்தியாவின் பிரச்னைகளாக வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் இருப்பதாக விமர்சித்திருக்கிறார் ராகுல் காந்தி. வாஷிங்டனில் நேஷனல் பிரஸ் கிளப் உடனான நேர்காணலில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இந்தியாவில் வேலையின்மை 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் என் நாட்டு மக்களை நேசிக்கிறேன். அவர்களின் வலி என்னுள் ஒரு உணர்ச்சிபூர்வமான தேடலை உருவாக்குகிறது. காந்திய சிந்தனைகளுடன் தான் நான் வளர்ந்தேன். அதுவே நம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க இப்போது என்னைத் தூண்டுகிறது” என்றார்.
முன்னதாக, கலிபோர்னியா ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “கடந்த 2000-ம் ஆண்டு அரசியலில் இணைந்தபோது இப்படியெல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்பதை கற்பனையிலும் எண்ணிப் பார்க்கவில்லை.
ஆனால், தற்போது அது நடந்துள்ளது. இருந்தாலும், அது உண்மையில் மக்களுக்கு சேவை செய்யும் பெரிய வாய்ப்பினை எனக்கு வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து போராடி வருகின்றன” என்று பேசினார்.