’மகளிருக்கு ரூ1500, மானிய விலையில் சிலிண்டர்..’-ம.பியில் வாக்குறுதிகளை அறிவித்த மல்லிகார்ஜுன கார்கே!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளைத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள சாகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படும். எல்.பி.ஜி சிலிண்டர் 500 ரூபாய்க்கு கிடைக்கும். பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். 100 யூனிட் மின் மானியம் வழங்கப்படும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்” என பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.
தொடர்ந்து அவர், “ தற்போது ம.பியில் உள்ளது சட்டவிரோத அரசு. பாஜக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்துக்கொள்கிறது. காங்கிரஸ் கட்சி, அரசியலமைப்பைக் காப்பாற்றியது. அமலாக்கத் துறையின் பயத்தைக் காட்டி பாஜக அரசாங்கத்தை உருவாக்கியது.
கர்நாடகா மற்றும் மணிப்பூர் உட்பட வெற்றிபெற முடியாத இடங்களில் பாஜக இதைத்தான் கடைப்பிடித்து அரசியலமைப்பை மாற்ற முயற்சி செய்கிறது. ஆனால் இது நடக்காது. அரசியலமைப்பைப் பாதுகாக்க 140 கோடி மக்கள் உயிருடன் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.