நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக கேரள காங்கிரஸின் முகமும், முன்னாள் மத்திய அமைச்சரும், முதல்வருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்த முறை பத்தினம்திட்டா தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதற்கான பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்தச் சூழலில், இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.அந்தோணி, “காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகள் பாஜகவில் இணைவது மிகவும் தவறு. என் மகன் அனில் கே.அந்தோணி பாஜகவில் இணைந்து பத்தனம்திட்டாவில் போட்டியிடுகிறார். அவர் தோற்க வேண்டும். அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ ஆண்டனி வெற்றிபெற வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் எனது மதம்” என்று கூறினார்.