மூத்தத் தலைவர் ஏ.கே. ஆண்டனி மகன் காங். கட்சியிலிருந்து விலகல் - மோடிக்கு ஆதரவா?

மூத்தத் தலைவர் ஏ.கே. ஆண்டனி மகன் காங். கட்சியிலிருந்து விலகல் - மோடிக்கு ஆதரவா?
மூத்தத் தலைவர் ஏ.கே. ஆண்டனி மகன் காங். கட்சியிலிருந்து விலகல் - மோடிக்கு ஆதரவா?
Published on

முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே. ஆண்டனி கேரளாவின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் கலவரங்களுக்கு நரேந்திர மோடி பொறுப்பு என குற்றம் சாட்டும் பிபிசி ஆவணப்படத்தை எதிர்த்து அணில் ஆண்டனி நேற்று சுட்டுரையில் தனது கருத்தை பதிவிட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் தனதுக் கருத்தை திரும்பப் பெறுமாறு தன்னை வற்புறுத்தி வருவதாகவும், இது தனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் அணில் ஆண்டனி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது கருத்தை கட்டாயத்தால் மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ள அவர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரை என்கிறப் பெயரில் பாதயாத்திரை செய்து வருபவர்கள் அன்பை பரப்புவதாக தெரிவித்து வந்தாலும், தன் மீது வெறுப்பை அள்ளி கொட்டியதாக அணில் ஆண்டனி குற்றம் சாட்டியுள்ளார். கருத்து சுதந்திரம் இல்லாத கட்சியில் தனக்கு இடமில்லை எனக் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில பிரிவில் டிஜிட்டல் மீடியா ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைத்தள மற்றும் டிஜிட்டல் பிரிவில் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்றப் பதவிகளை அணில் ஆண்டனி வகித்து வந்தார். இந்த பதவிகளிலிருந்து விலகுவதாகவும், கட்சியில் உள்ள பெரும்பாலோர் தலைமைக்கு சாமரம் வீசுபவர்களாக உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தேச நலனுக்கு எதிரான கருத்துக்களை தான் ஆதரிக்க முடியாது எனவும் அணில் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குப்பையில் தூக்கி வீசப்படுவார்கள் எனவும் அவர் கடுமையாக சாடி உள்ளார். அணில் ஆண்டனி கட்சியிலிருந்து விலகி உள்ளது மற்றும் கட்சியை கடுமையாக விமர்சித்தது கேரளா மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது ராஜினாமா அறிக்கையில், சசிதரூர் உள்ளிட்டோருக்கு அணில் ஆண்டனி நன்றி தெரிவித்துள்ளார். பிபிசி வெளியிட்டுள்ள ஆவண படத்தை ஆதரிப்பது தேச நலனுக்கு எதிரானது என்கிற கருத்து அரசியல் வட்டாரங்களில் வலியுறுத்தப்பட்டு வருவது இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணம் என கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் சமீபத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கியது குறித்து சந்தேகம் தெரிவித்திருந்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. ராணுவத்தின் வீரத்தை கேள்வி கேட்பதா என சர்ச்சை உண்டான நிலையில், ராகுல் காந்தி திக்விஜய் சிங் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங் தனது சொந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளித்துள்ளது. இத்தகைய சூழலில் அணில் ஆண்டனி ராஜினாமா செய்துள்ளார்.

பிபிசி ஆவணப்படம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிரச்சாரம் என மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளன. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 20 வருடம் முன்பு நடைபெற்ற குஜராத் கலவரத்துக்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com