ராஜ்யசபா தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ கட்சி மாறி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததையடுத்து, பாஜகவின் பி டீம் காங்கிரஸ்தான் என அக்கட்சியின் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு காலத்தில் கூட்டணி கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் இருந்து 4 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், நான்காவது இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
மாநில சட்டமன்றத்தில் இருந்து நான்காவது இடத்தை வெல்ல போதுமான வாக்குகள் இல்லை என்ற போதிலும், மாநிலத்தில் உள்ள பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று அரசியல் கட்சிகளும் அந்த இடத்திற்கு வேட்பாளர்களை நிறுத்தியதால், தேர்தல் நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குமாரசாமி தனது கட்சி வேட்பாளர் டி குபேந்திர ரெட்டியை ஆதரிக்குமாறு காங்கிரஸை வலியுறுத்தினார்.
ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ், குமாரசாமி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு திட்டவட்டமாக மறுத்ததோடு, தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள் என கோரிக்கை வைத்தது. ஜூன் 2020 இல் முன்னாள் பிரதமர் எச் டி தேவகவுடா காங். ஆதரவுடன் கடந்த முறை ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை காங்கிரஸ் சுட்டிக்காட்டியது. 2018 சட்டமன்ற தேர்தலில், வெறும் 37 இடங்களைப் பெற்ற போதிலும் குமாரசாமியை முதல்வராக்கியதையும் காங்கிரஸ் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது.
ஆனால் காங். கோரிக்கையை குமாரசாமி நிராகரிக்க, 4வது ராஜ்ய சபா இடத்திற்கு 3 கட்சிகள் வேட்பாளர்களை இறக்கின. இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ சீனிவாச கவுடா காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவே குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். “எனக்கு காங்கிரஸ் கட்சி பிடிக்கும், அதனால் அக்கட்சிக்கு வாக்களித்தேன்” என சீனிவாச கவுடா தெரிவித்தார்.
இதையடுத்து ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.குமாரசாமி, “காங்கிரஸ் இன்று தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறது. காங்கிரஸ்தான் பாஜகவின் 'பி' டீம். அவர்கள்தான் பிரதானம். நாட்டில் பா.ஜ.க.வின் எழுச்சிக்கு காரணம் அவர்கள்தான்” என்றார்.