ஜனவரி முதல் வாரத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில் அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை `இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை முன்னிறுத்தி ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 9 மாநிலங்களில் 46 மாவட்டங்கள் வழியாக 108 நாட்கள் கடந்து டெல்லிக்குள் யாத்திரை நுழைந்திருக்கிறது. ஒரு வாரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் 3 ஆம் தேதி யாத்திரை தொடங்கி ஹரியானா வழியாக உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் யாத்திரையை தொடங்கி வைத்திருந்தர். பின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணப்பட்ட ராகுல்காந்தியின் யாத்திரையில், சமீபத்தில் திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும், ஹரியானா டெல்லி ஆகிய மாநிலங்களில் யாத்திரையில் கலந்து கொண்டிருந்தனர். மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் உள்ளிட்ட பிற கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் யாத்திரைக்கு ஆதரவான குரல் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பேரணியில் கலந்து கொள்ளுமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஆகியோருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இவர்கள் கலந்து கொள்வது குறித்து இதுவரை உறுதியான எந்த தகவலும் காங்கிரஸ் தரப்பிற்கு தரப்படவில்லை என்றே தகவல் சொல்லப்படுகிறது.
இக்கட்சிகளின் பங்கேற்பு 2024 பொதுத் தேர்தலுக்கான அரசியல் கூட்டணி பற்றிய கருத்தை தற்போதே ஏற்படுத்தக்கூடும் என எண்ணி தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.