ராஜினாமா எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு : பாஜக ஆட்சி அமைக்க ஆயத்தம்?

ராஜினாமா எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு : பாஜக ஆட்சி அமைக்க ஆயத்தம்?
ராஜினாமா எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு : பாஜக ஆட்சி அமைக்க ஆயத்தம்?
Published on

மத்திய பிரதேசத்தில் தற்போது மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியப் பிரதேசத்தை ஆண்டு வருகிறது. கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இன்று 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதை அடுத்து சரிவைக் கண்டுள்ளது. இவர்களில் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆறு அமைச்சர்கள் உட்பட இந்த எம்.எல்.ஏக்களில் 17 பேர் நேற்றில் இருந்து தொடர்பி இல்லை. அவர்கள் பெங்களூருக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. அவர்களுடன் இணைந்த மற்ற இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஏற்கனவே பெங்களூரில் தங்கியிருந்தனர். மேலும், சொந்த வேலையாக பெங்களூரு வந்துள்ளதாகவும், தங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், கர்நாடக டிஜிபிக்கு இவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அமைச்சர்கள் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமாவை கவர்னருக்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக ராஜ் பவன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ராஜினாமா கடிதங்களை வைத்திருப்பதை போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. மற்றவர்கள் போபாலில் தனித்தனியாக ராஜினாமா செய்துள்ளனர்.

இதனிடையே சட்டமன்ற சபாநாயகர் என்.பி பிரஜாபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாநில சட்டசபையின் நிறுவப்பட்ட சட்ட நடைமுறைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் மத்தியப் பிரதேச மாநில அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க பாஜக டெல்லி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். விரைவில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கை குறித்து அவர்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

இதனிடையே முன்னதாக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ. ராஜேஷ் சுக்லா, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. சஞ்சீவ் குஷ்வாலா ஆகியோர் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுஹானை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com