தென்னிந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக பா.ஜனதா தலைவர் தருண் விஜய் மீது பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.
பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண் விஜய், டெல்லியில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கருப்பின மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துக் கொண்டார். அப்போது தருண்விஜய் கூறும்போது, ‘நாங்கள் நிறவெறியர்கள் என்றால் ஏன், தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழவேண்டும்? எங்களை சுற்றி கருப்பர் இன மக்களும் இருக்கிறார்கள். இந்தியாவை நிறவெறி கொண்டவர்கள் என்று கூற முடியாது’ என்று சொன்னது பெரும் சர்ச்சையை எழுப்பியது. தருண் விஜய் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து டிவிட்டரில் தருண் விஜய் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் தென்னிந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக, மக்களவையில் தருண் விஜய் மீது காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி நோட்டீஸ் வழங்கி உள்ளது.