ஜார்க்கண்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராகுல் காந்தியை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் காக்க வைத்ததற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை சூடு பிடித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் தீவிர பரப்புரையை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி தனி ஹெலிகாப்டரில் டெல்லி புறப்பட தயாரானார்.
ஆனால், ஹெலிகாப்டர் பறப்பதற்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கவில்லை. இதனால் 75 நிமிடங்கள் வரை ராகுல் காந்தி ஹெலிகாப்டரிலே காத்திருந்தார். இறுதியில் ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் புறப்பட்டு சென்றது.
பிரதமர் நரேந்திர மோடி தியோகர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டெல்லி திரும்ப இருந்த நிலையில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ராகுல் ஹெலிகாப்டருக்கு அனுமதி வழங்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.