தமிழ்நாடு ஃபார்முலா வழியில்.. தெலங்கானாவில் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிடும் காங். Vs பிஆர்எஸ்!

தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் தமிழகத்தின் ஃபார்முலாவைப் பின்பற்றி உள்ளதாகப் பேசப்படுகிறது.
telangana election
telangana electiontwitter
Published on

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, இந்த ஆண்டு இறுதியில் 5 மாநிலங்களில் (மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான்) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை தேர்தல் வேட்பாளர்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.

telangana election
telangana electiontwitter

தெலங்கானாவில் நவ. 30  வாக்குப்பதிவு

இந்த நிலையில், தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 119 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாரத் ராஷ்டிர சமிதி (தெலங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற பெயர், பாரத் ராஷ்டிர சமிதி என்கிறரீதியில் தேசிய அளவில் மாற்றப்பட்டது) கட்சி, பிற கட்சிகளைவிடத் தேர்தலை சந்திப்பதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில், பல அதிரடி தேர்தல் அறிவிப்புகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி தந்த ஹமாஸ்... மூளையாக செயல்பட்ட மூவர்.. யார் இவர்கள்? அதிர்ச்சி பின்னணி!

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பி.ஆர்.எஸ்.

அக்கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தேர்தலுக்கான கட்சி அறிக்கையை வெளியிட்டார். அதில்,

  • வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் எல்.ஐ. சி. காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும். இதன்மூலம் மாநிலத்தில் 93 லட்சம் குடும்பங்கள் பயன் அடைவர்.

  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தற்போது ‘ரைத்து பந்து’ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.

  • ஏழை குடும்பத்திற்கும், ஊடகத்தினருக்கும் ரூ. 400க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

  • இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் அளிக்கப்படும்.

  • சவுபாக்கியா லட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்கள் அனைவருக்கும் மாத உதவித்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும்.

  • தவிர, விதவைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிக்தொகையும் உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது

என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: காதலிக்காக 40,000 பணத்தைத் திருடிய கோடீஸ்வரன்; சிம்கார்டால் சிக்கிய சோகம் - என்ன நடந்தது?

காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

இந்த நிலையில், தெலங்கானாவில், காங்கிரஸ் முதற்கட்டமாக 55 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை அடக்கம். தவிர, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வெல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தும்குண்டா நரச ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. கர்நாடகா மாநில தேர்தலில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் தெலங்கானா தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே காங்கிரஸ் வாக்குறுதிகளை அறிவிக்கத் தொடங்கியது.

மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு

பாரத் ராஷ்டிர சமிதி தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதற்கு முன்பாக

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 உதவித் தொகை,

சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500,

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்,

வீடுகட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி

என சில முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ’தெலங்கானாவில் மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும்’ என தெரிவித்திருந்தார்.

தற்போது, அதனை மிஞ்சும் வகையிலான வாக்குறுதிகளை பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சந்திரசேகர ராவ் காப்பி அடித்துள்ளார் என தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இவ்விரண்டு கட்சிகளுமே, தமிழ்நாட்டில் 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளையே தற்போது முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: திசை திரும்பும் போர்.. இஸ்ரேலுக்கு அட்வைஸ் பண்ண ஜோ பைடன்!

2021ஆம் ஆண்டில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகளை அறிவித்திருந்தது.

பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டம்,

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000,

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித் தொகை போன்ற அறிவிப்புகள் அவர்களுக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

இதைப் பின்பற்றி கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாக இந்த திட்டங்களை அமல்படுத்தவும் செய்தது.

இதையே தெலங்கானாவிலும் காங்கிரஸ் கடைப்பிடித்துள்ளது. தற்போது அம்மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் காங்கிரசின் அறிவிப்புகளைப் பின்பற்றியுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதை பின்பற்றி தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்படி, தெலங்கானா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்காகக் காங்கிரஸ், பிஆர்எஸ் என இரு கட்சிகளும் மக்களைக் கவர மாறிமாறி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், இலவசங்களை எதிர்த்து வரும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையில் என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட உள்ளது என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்! சுழலில் சுருண்டது சாம்பியன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com