பெகாசஸ் உளவு சர்ச்சை: காங்கிரஸ், பாஜக கடும் வார்த்தை மோதல்

பெகாசஸ் உளவு சர்ச்சை: காங்கிரஸ், பாஜக கடும் வார்த்தை மோதல்
பெகாசஸ் உளவு சர்ச்சை: காங்கிரஸ், பாஜக கடும் வார்த்தை மோதல்
Published on

பெகாசஸ் செயலி மூலம் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த விவகாரம் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்த சதிக்கு பின்னால் காங்கிரஸும், சர்வதேச அமைப்புகள் சிலவும் இருப்பதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஏ நிறுவனத்தின் பெகாசஸ் செயலி மூலம், இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்தி, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சுர்ஜேவாலா, இந்த சதிக்குப் பின்னால் இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா-தான் என்றும், அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் இதுவிஷயத்தில் பிரதமரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தவேண்டும் என்றார். பெகாசஸ் செயலி மூலம் 121 பேரின் வாட்ஸ் அப் எண்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத், மாநிலங்களவையில் கடந்த 2019-ஆம் ஆண்டு கூறியிருந்த நிலையில், அதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவை உலக அளவில் அவமானப்படுத்தும் நோக்கில், பெசாகஸ் விவகாரத்தை சிலர் பெரிதுப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தங்களது சதி மூலம், தடையை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என தெரிவித்துள்ள அமித் ஷா, சில சர்வதேச அமைப்புகள் இந்தியா வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முன்னாள் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்த விவகரம் எழுப்பப்பட்டது ஏன் என்றார். பெகாசஸ் உளவு அறிக்கையை Forbidden அமைப்புடன் இணைந்து தயாரித்த அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, நிதி ஆதாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டதாக ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், பெகாசஸ் விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com