பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி?

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி?
பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி?
Published on

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே மக்களவைத் தேர்தலுக்காக ஏறக்குறைய கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜகவை வீழ்த்த இப்போதே எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேச்சுகளும் அடிபடுகின்றன. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலிலும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து. இதனால் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே மக்களவைத் தேர்தலுக்காக ஏறக்குறைய கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒத்த கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில் தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி கண்டன. கூட்டணி சரியாக எடுபடாததால் இரு கட்சிகளிலும் அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை தனித்தே களம் கண்டன. இது பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்து அக்கட்சி வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மறுபடியும் கூட்டணி அமைக்க உள்ளன. இதற்காக இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா 20 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 8 தொகுதிகள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுஒருபுறம் இருக்க அதிக மக்களவை தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்தே களம் காண திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com