ஆந்திராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் தங்களது கட்சிகளை பிரபலப்படுத்த, இலவச காண்டம் பாக்கெட்டுகளை கொடுத்து பிரபல அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். கட்சி, அரசியல் என்பதையெல்லாம் தாண்டி, இவ்விஷயம் இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் அந்த மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இதனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், தங்கள் தொகுதியில் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக ஆளும் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியும் தங்கள் கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் ஆகியவற்றுடன் கூடிய காண்டம் பாக்கெட்களை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கி பிரசாரம் செய்வது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தயார் செய்துள்ள தேர்தல் விளம்பர காண்டம் பாக்கெட் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன. அந்தக் காட்சிகளை பார்க்கும் வாக்காளர்கள் மற்றும் நெட்டிசன்கள் “குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இப்படி செய்கிறார்கள் என்று சிலர் சொல்லலாம். அல்லது தேவையற்ற கருவுறுதலை தவிர்க்ககூட இதை அவர்கள் செய்யலாம். அப்படி ஏதேனும் உள்ளூர நல்ல நோக்கத்தில் செய்தால் தவறில்லை.
இருப்பினும் எதற்காக இதை செய்கிறோம் என்பதுபற்றி முழுமையாக பேசாமல், விழிப்புணர்வும் கொடுக்காமல்... இப்படி நேரடியாக காண்டம் பாக்கெட்டுகளை மட்டும் இலவசமாக விநியோகிப்பது நிச்சயம் தவறு. இத்தகைய செயல்கள், இளைய தலைமுறையை தவறான வழியில் இட்டுச்செல்லும். ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்யவும் அரசியல் கட்சிகள் துணிந்து விட்டன. அதற்கு இதுவே சாட்சி” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.