அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, அங்கு கூட்டங்களில் பங்கேற்று உரையாடி வருகிறார். அப்போது, இந்திய அரசியல் தொடர்பாக அவர் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
முன்னதாக, இந்தியாவில் நடைபெற்றும் வரும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பது பற்றியதே” எனத் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. அடுத்து, “இந்தியாவில் இடஒதுக்கீடு எவ்வளவு காலம் தொடரும்” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தியா அனைத்து தரப்பினருக்குமான ஒரு நியாயமான இடத்தை அடையும்போது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்போம். ஆனால், தற்போது இந்தியா அந்த இடத்தை அடையவில்லை” என பேசியிருந்தார்.
மேலும், “இந்தியா என்பது ஒரே கருத்தியல் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால், பல கருத்தியல்கள் சேர்ந்தது தான் இந்தியா என்பதை நாங்கள் நம்புகிறோம்.
ஜாதி, மதம், மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிரிவு மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் (ஆர்எஸ்எஸ்) பார்வை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இதுதான் மோதலின் அடிப்படை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் மோடி சீர்கலைக்க முயல்கிறார் என்பதை இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதுவே தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது.
அரசியலமைப்பைப் பாதுகாக்க பாஜக தவறிவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு பாதுகாக்கத் தவறிவிட்டது என்பது தேர்தல் பிரசாரத்தின்போது எதிரொலித்தது. தேர்தலில் மக்கள் அதை தெளிவாகப் புரிந்துகொண்டனர். இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பியபோது அதை மக்கள் புரிந்துகொண்டார்கள். அரசியலமைப்பை தாக்குவது என்பது இந்திய பாரம்பரியத்தை தாக்குவதற்கு சமம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேச்சு பாஜக தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, ”இதற்கு முன்பு ராகுல் காந்தி குழந்தைத்தனமான செயல்களில் ஈடுபட்டார். ஆனால் இப்போது ஆபத்தான மற்றும் விஷமத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” எனத் தெரிவித்திருந்தார். அதுபோல் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராகுலின் கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் அமித் ஷா வெளியிட்ட பதிவில், அந்நிய சக்திகளுடன் சேர்ந்துகொண்டு நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் தேசவிரோத கருத்துகளை ராகுல் காந்தி கூறி வருவதாக விமர்சித்துள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று இதுபோன்ற கருத்துகளை கூறி, தேசிய பாதுகாப்புக்கு ராகுல் காந்தி அச்சுறுத்தலாக இருந்துவருவதாக சாடி உள்ளார்.
மதம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை ராகுல் காந்தியின் கருத்துகள் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ள அமித் ஷா, இடஒதுக்கீட்டை ஒழிப்பது குறித்து பேசி, காங்கிரஸ் கட்சியின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கொள்கையை ராகுல் காந்தி வெளிப்படுத்தி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.