தனது வீட்டு வாசலில் காரை நிறுத்திய கவுன்சிலரின் கை விரலை துண்டாக வெட்டிய இளைஞரை ஹரியாணா போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹரியாணா மாநிலம் கர்னல் நகரின் 13-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் இஷ் குலாட்டி. இவர் வீட்டின் முன்பு பெரிய அளவில் இடம் இருந்தபோதிலும், பக்கத்து வீட்டு வாசலில்தான் தனது காரை நிறுத்துவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியர், பல முறை கூறியும் அங்கு கார் நிறுத்துவதை கவுன்சிலர் கைவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த தம்பதியரின் மகனான ஜிதேந்திர குமார் (26), வெளியூரில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கவுன்சிலர் அவர்களின் வீட்டில் கார் நிறுத்தி வருவது குறித்து அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த சூழலில், நேற்று காலை வழக்கம் போல அவர்களின் வீட்டு வாசலில் கவுன்சில் இஷ் குலாட்டி காரை நிறுத்தியிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஜிதேந்திர குமார், காரை இங்கே நிறுத்துவதால் மிகவும் இடையூறாக இருப்பதாகவும், அதனால் வேறு இடத்தில் காரை நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது வீட்டுக்கு சென்ற ஜிதேந்திர குமார், கத்தியை எடுத்து வந்து கவுன்சிலர் இஷ் குலாட்டியை தாக்கினார். இதனை தடுக்க முயன்றதில் கவுன்சிலரின் இடது கை கட்டை விரல் துண்டானது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கவுன்சிலரின் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜிதேந்திர குமாரை கைது செய்தனர்.