நடப்பாண்டு காமன்வெல்த் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் 3 தங்கம், ஒரு வெள்ளி வென்று அதிகப் பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் கடந்த 28-ம் தேதி கோலகலமாக துவங்கியது. சுமார் 72 நாடுகளைச் சேர்ந்த 5,000 வீரர்கள், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, மல்யுத்தம், கிரிக்கெட், சைக்கிளிங், ஹாக்கி, ஜூடோ, டேபிள் டென்னிஸ், பளுத்தூக்குதல் உள்பட 20 பிரிவுகளில் இந்தப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. கடந்த 11 நாட்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் இந்திய நாட்டைச் சேர்ந்த 200 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இன்றுடன் இந்த காமன்வெல்த் போட்டிகள் நிறைவுப் பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப் பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் எந்தெந்தப் பிரிவுகளில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
1. தடகளம் - 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் = மொத்தம் 8
2. பேட்மிண்டன் - 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் = மொத்தம் 6
3. குத்துச் சண்டை 3 தங்கம் 1 வெள்ளி, 3 வெண்கலம் = மொத்தம் 7
4. கிரிக்கெட் - 1 வெள்ளி = மொத்தம் 1
5. ஹாக்கி - 1 வெள்ளி, 1 வெண்கலம் = மொத்தம் 2
6. ஜூடோ - 2 வெள்ளி, 1 வெண்கலம் = மொத்தம் 3
7. லான் பால்ஸ், பாரா லான் பால்ஸ் - 1 தங்கம், 1 வெள்ளி = மொத்தம் 2
8. பாரா பளுத்தூக்குதல் - 1 தங்கம் = மொத்தம் 1
9. ஸ்குவாஷ் - 2 வெண்கலம் = மொத்தம் 2
10. டேபிள் டென்னிஸ், பாரா டேபிள் டென்னிஸ் - 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்= மொத்தம் 7
11. பளுத்தூக்குதல் - 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் = மொத்தம் 10
12. மல்யுத்தம் - 6 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் = மொத்தம் 12
மொத்தம் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் = மொத்தம் 61.
இதன்மூலம் தரவரிசையில் 4-ம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு, ஆடவர் இரட்டையர் பிரிவு, டேபிள் டென்னிஸ் குழு ஆகியவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த ஷரத் கமல் மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு, டேபிள் டென்னிஸ் குழு பிரிவுகளில் தங்கப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். அதேபோல் மல்யுத்தப்பிரிவில் தான் அதிக அளவிலான பதக்கங்கள் கிடைத்துள்ளன.
நாடுகளின் பதக்க விவரங்கள்:
1. ஆஸ்திரேலியா - 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் = மொத்தம் 178
2. இங்கிலாந்து - 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் = மொத்தம் 176
3. கனடா - 26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் = மொத்தம் 92
4. இந்தியா - 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் = மொத்தம் 61
5. நியூசிலாந்து- 20 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் = மொத்தம் 49