ஜம்மு காஷ்மீர் | வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே 5 MLA... ஆட்சியமைக்க பாஜக போடும் பக்கா ப்ளான்!

ஜம்மு - காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பே, பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 5 பேர் எம்எல்ஏவாக ஆக உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், பாஜக
ஜம்மு காஷ்மீர், பாஜகஎக்ஸ் தளம்
Published on

ஜம்மு - காஷ்மீர் தேர்தல் - நாளை வாக்கு எண்ணிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு நிலவுகிறது. 90 இடங்களுக்கான ஜம்மு - காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் கடந்த செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி (நாளை) எண்ணப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐந்து உறுப்பினர்களை நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம்

இந்த நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை நடக்கும்முன்பே, பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட 5 பேர் எம்எல்ஏ-களாக ஆக உள்ளனர். மேலும், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் உறுப்பினர்களாக லெப்டினென்ட் கவர்னரால் பரிந்துரைக்கப்படும் இந்த ஐந்து பேர்தான் யூனியன் பிரதேசத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஜம்மு காஷ்மீரை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதாவது, ஜம்மு - காஷ்மீர் (மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை) தற்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில், துணநிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம். (ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, காஷ்மீர் பண்டித்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் (PoJK) அகதிகள் ஆகியோருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய ஐந்து உறுப்பினர்களை நியமிக்க லெப்டினென்ட் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.)

இதையும் படிக்க: “மலப்புரம் தங்கம் கடத்தல்: பெரும்பாலானோர் முஸ்லிம்கள்”- கேரள எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு!

ஜம்மு காஷ்மீர், பாஜக
ஜம்மு - காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு!

ஐந்து நியமன உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு!

அந்த வகையில், ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019இன்கீழ் காஷ்மீரில், ஐந்து எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிப்பார். துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் ஐந்து எம்எல்ஏக்களும், சட்டப் பேரவையின் முதல் கூட்டத்திற்கு முன்னதாகவே நியமனம் செய்யப்படுவார்கள். அதன்படி, உள்துறை அமைச்சகம் 5 பேரைப் பரிந்துரை செய்த நிலையில், அதற்கு இப்போது துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஐந்து நியமன உறுப்பினர்களுக்கும் மற்ற எம்எல்ஏ-க்களைப் போலவே அதே அதிகாரங்களும் வாக்களிக்கும் உரிமையும் உண்டு. இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், ஐந்து உறுப்பினர்களின் நியமனத்தை எதிர்த்துள்ள அக்கட்சிகள், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவித்துள்ளன.

பேரவைக்கு ஐந்து உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் துணைநிலை ஆளுநருக்கு வழங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்வந்தால் தனது கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடும்
ஃபரூக் அப்துல்லா

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரவீந்தர் சர்மா ‘‘ஜம்மு-காஷ்மீரில் அரசாங்கம் அமைவதற்கு முன்பு துணைநிலை ஆளுநர் 5 எம்எல்ஏக்களை நியமிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் ஜனநாயகம், மக்களின் ஆணை மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் மீதான தாக்குதல் ஆகும்” என விமர்சித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, “பேரவைக்கு ஐந்து உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் துணைநிலை ஆளுநருக்கு வழங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்வந்தால் தனது கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடும்” எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் இல்திஜா முப்தி, ”சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களை நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்குவது தேர்தலில் வெட்கக்கேடான மோசடி” எனச் சாடியுள்ளார்.

இதையும் படிக்க: உணவை வேகவைத்தும் வறுத்தும் சாப்பிட்ட ஹரப்பா மக்கள்.. அசைவ பயன்பாடு குறித்தும் ஆய்வில் வெளிவந்த தகவல்

ஜம்மு காஷ்மீர், பாஜக
ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் அதிகரிக்கும் சிறிய கட்சிகளின் முக்கியத்துவம்?

நியமன உறுப்பினரால் சட்டமன்றத்தின் பலம் அதிகரிக்கும்!

ஜம்மு - காஷ்மீரில் புதிய அரசு அமைவதற்கு முன்பு ஐந்து உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டால், ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தின் பலம் 95ஆக இருக்கும். அதனால், அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை 48 இடங்களாக அதிகரிக்கும்.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஜம்மு - காஷ்மீரில் என்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இது பாஜகவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்தே, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 எம்எல்ஏக்களும் கேம்சேஞ்சராக இருப்பார்கள் என்பதாலும், அவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பதாலும் இதர கட்சிகள் அச்சமடைந்துள்ளன.

காஷ்மீரும் புதுச்சேரியைப் போன்றதே! கடந்த கால வரலாறு!

காஷ்மீர் சட்டசபையைப் பொருத்தமட்டில், புதுச்சேரி சட்டசபை மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. அங்கும், மூன்று நியமன உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களைப்போல பணியாற்றுவார்கள். அந்தவகையில் புதுச்சேரியில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. 30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்துக்கு மூன்று நியமன எம்எல்ஏக்களை நியமித்துக்கொள்வதற்கு விதி உள்ளது.

ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு, இந்த மூன்று நியமன உறுப்பினர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைக்காமல் காலம் தாழ்த்தியதால், அப்போதைய மத்திய பாஜக அரசு, நேரடியாக மூன்றுபேரை எம்எல்ஏக்களாக நியமித்தது. அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ‘முதல்வருடன் கலந்தாலோசித்தபிறகே துணைநிலை ஆளுநர், 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்திருக்க வேண்டும்’ என்று புதுச்சேரி அரசு வாதிட்டது. ஆனால், ’இதில் எந்தவித சட்டமீறலும் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதுடன், எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதனால் ஜம்மு – காஷ்மீரில் 5 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தற்போது முக்கியமாக பேசப்படுகிறது.

இதையும் படிக்க: கோவா விவகாரம் | தொடரும் போராட்டம்.. பாஜகவைச் சாடிய ராகுல் காந்தி!

ஜம்மு காஷ்மீர், பாஜக
ஜம்மு-காஷ்மீர் | இறுதிக்கட்ட தேர்தல்.. 65.48 சதவிகிதம் வாக்குப்பதிவு - அரியணை யாருக்கு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com