கேரளா வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்து விட்டது. 21-ஆம் நூற்றாண்டிலும் வரதட்சணைப் புகாரா எனக் கேட்பவர்களுக்கு. ஆம், புகார் மட்டுமல்லாது, அந்தக் கொடுமைக்கு, பெண்களின் உயிரும் பறிபோகியிருக்கும் சம்பவங்கள்தான் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
100 சவரன் நகை. ஒரு ஏக்கர் நிலம். விலையுயர்ந்த கார். இத்தனையும் கொடுத்தும். பத்தாது எனக் கூறி, வரதட்சணைக் கொடுமை செய்ததால் கொல்லத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம்தான் தற்போது கேரளாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. விஸ்மயா - கிரண் இடையே திருமணம் நடைபெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே விஸ்மயாவின் உயிர் போயிருக்கிறது. இதற்கு கிரண் வரதட்சணை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தியதே காரணம் என்று புகாரளிக்கப்பட்டது. இதனை அடுத்து கிரண் கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்மயா உயிரிழந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நீங்கும் முன்னரே மேலும் சில பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த தகவல்கள் வெளியாகி கேரளாவை உலுக்கியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண், திருமணமான சில மாதங்களிலேயே அவரது காதல் கணவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கணவரின் தந்தை வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதேபோல ஆலப்புழாவில் ராணுவ வீரரின் மனைவியான சுசித்ரா என்ற பெண், திருமணமான இரண்டு மாதத்திலேயே தனது கணவரின் வீட்டில் உயிரை விட்டுள்ளார்.
அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24 மணி நேர ஹெல்ப்லைன் - 9497999955 என்ற எண்ணை முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். இதற்காக ஒரு சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்து வருவதாகச் சொல்கின்றனர்.
பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள பினராயி விஜயன், "மனைவியை அடிப்பது ஆண்மை என்றும், மன்னிப்பதும், சகித்துக்கொள்வதும் பெண்மையின் அடையாளம் என்றும் நினைக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
"இது போன்ற தவறான கருத்துகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது" என வேண்டுகோள் வைத்துள்ள அவர், "பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, பெண்கள் விற்பனைக்கு அல்ல என தங்கள் வீடுகளில் எழுதி ஒட்டியுள்ள, ஏராளமான பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் ஆசிட் தாக்குதல், குடும்ப வன்முறை, திருமணமான பெண்களைத் துன்புறுத்துதல் / வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை, சைபர் குற்றங்கள் என 23 பிரிவுகளில், 19,730 புகார்கள் பெண்களுக்கு எதிராகப் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது. அதேபோல், 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, 23,722 புகார்கள் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்த புகார்களில், குடும்ப வன்முறை காரணமாக மட்டும், 2019-ல் 2,960 புகார்களும், 2020-ல் 5,297 புகார்களும் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறையில், ஜூலை, ஆகஸ்ட், டிசம்பர் ஆகிய மாதங்களில் அதிகளவில் நடந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன
2019-ம் ஆண்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தகவலின் படி, இந்தியா முழுவதும், 2018-ல் 13,275 வரதட்சணைக் கொடுமைகளும், 2019-ல் 13,674 வரதட்சணைக் கொடுமைகளும் நிகழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த கொடுமையினால். தமிழகத்தில் 2019-ல் மட்டும் 239 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குற்றத்திற்கான தண்டனைகள் என்னென்ன?
இந்தியாவில் 1961-ம் ஆண்டு வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி, வரதட்சணை கொடுத்தாலோ, வாங்கினாலோ 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும், வரதட்சணை கேட்டால், 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், அத்துடன் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் 304பி-ன் படி, வரதட்சணை கொடுமையால் இறப்பு ஏற்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கொடுக்கப்படும். இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ-ன் படி, கணவன் அல்லது உறவினர்கள் கொடுமைப் படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பாக, 'புதிய தலைமுறை'யின் 'நியூஸ் 360' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் கூறுகையில், முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், அந்த வீட்டின் சொத்தாகப் பார்க்கிறார்கள். அதே வேளையில் பெண் குழந்தை பிறந்தால் அந்த வீட்டின் செலவாக, கடனாகப் பார்க்கிறார்கள். இந்த மனநிலை முதலில் மாற வேண்டும்.
பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் கடமை முடிந்தது என நினைக்கின்றனர். அந்த பெண் எப்படி வாழ்கிறது என்பதை நினைப்பதே இல்லை. என்ன நடந்தாலும் அந்த பெண் திரும்ப நம் வீட்டிற்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். 19 வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பதை விட, அந்த பெண் மனதளவில் எப்படி தயாராக இருக்கிறாள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆணாதிக்க சமூகத்தில் வரதட்சணை கொடுமையானது தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. கணவரின் துணை இல்லாமல் வரதட்சணை கொடுமை நடக்காது. சாதித் தூய்மையையும், இன தூய்மையையும் காத்துக் கொள்ள அரேஞ்ச் மேரேஜ் மிகவும் உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் அங்கும் வரதட்சணை கொடுமைகள் அதிகமாகிறது. காதல் திருமணங்களிலும் வரதட்சணை கொடுமை நடைபெறுவதில்லை என கூறமுடியாது. கணவரைத் தாண்டி, கணவரின் உறவினர்களின் மூலமாகத்தான் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெறுகிறது. இதிலும், மனரீதியான துன்புறுத்தல் சாகும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனநிலை தற்போது வரை மக்கள் மனதில் தொடர்கிறது. இந்த நிலை ஒழிய வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, அவர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. தன்னுடைய பெற்றோரைப் பாதுகாப்பதில் நிறையப் பெண்கள் இருக்கின்றனர். இந்த சூழ்நிலை எல்லாம் மாறும்போது, இந்த வரதட்சணை கொடுமை இன்னும் மாறாதது தான் வேதனையாக இருக்கிறது. ஒரு பெண் எவ்வளவு நகையை தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்தாலும், அந்த பெண்ணின் விருப்பப்படி, அந்த நகைகளைப் பயன்படுத்த அனுமதி கிடைப்பதில்லை. அதற்கான உரிமையும் பறிக்கப்படுகிறது என்கிறார் நிவேதிதா லூயிஸ்.