சனாதன தர்மத்தை சீர்குலைக்கும் விதமாக நடந்துகொண்டதாக நடிகை டாப்சி பன்னு மீது மும்பையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் கடந்த மார்ச் 12ம் தேதியன்று பிரபல காஸ்மெட்டிக் நிறுவனமான லாக்மியின் ஃபேஷன் வீக் 2023 என்ற பெயரிலான ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல நடித்து வரும் நடிகை டாப்சி பன்னு சிவப்பு நிற கவுனின் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நகைக்கடையில் அக்ஷய திரிதியைக்காக இந்து கடவுளாக கருதப்படும் மகாலக்ஷ்மி உருவத்தில் பிரத்யேக தயாரிக்கப்பட்ட நகையை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகை டாப்சி, “ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ரக நகையை கண்டு மயங்கியே விட்டேன். தஞ்சாவூரின் பாராம்பரிய வகை நகையாக இருக்கும் இந்த நெக்லெஸ் என்னை மிகவும் கவர்ந்ததோடு, நகை மீதான ஆவலையும் அதிகப்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த லக்ஷ்மி உருவம் பொறித்த நகையை அணிந்த டாப்சியின் வீடியோ மற்றும் ஃபோட்டோ வைரலான நிலையில், “சானாதன தர்மத்தை சீரழிக்கும் விதமாக கடவுள் லக்ஷ்மி உருவம் பொறித்த நகையை அரைகுறையான ஆடையுடன் அணிந்து மத ரீதியான உணர்வுகளை புண்படுத்துகிறார்” எனக் குறிப்பிட்டு இந்தூர் பாஜக எம்.எல்.ஏ மாலினியின் மகன் ஏக்லவ்யா கவுர் சத்ரி புரா காவல் நிலையத்தில் டாப்சி மீது புகார் கொடுத்திருக்கிறார்.
முன்னதாக கடந்த 2021 புத்தாண்டின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், இந்து கடவுள்களையும் இழிவாக பேசியதாகச் சொல்லி ஸ்டாண்ட் அப் காமெடியன் முனாவர் ஃபருக்கி மீது புகார் கொடுத்து அவரை கைது செய்யவும் செய்திருந்தார் ஏக்லவ்யா கவுர். அந்த வகையில் தற்போது நடிகை டாப்சி பன்னு மீதும் புகார் கொடுத்திருப்பதால் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.