ஜம்மு-காஷ்மீரின் ஐந்து மாவட்டங்களில் 2ஜி ரக இணையதள சேவை மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடந்த 5ஆம் தேதி முதல் இணையதள சேவைகள் முடக்கப்பட்டிருந்தது. அத்துடன் அங்கு மக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுபாடு படிப்படியாக தளர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் அங்கு நிலவும் சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் இன்று முதல் ஜம்மு பகுதியிலுள்ள 5 மாவட்டங்களில் 2ஜி ரக இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜம்மு பகுதியிலுள்ள ஜம்மு, ரியாசி, சம்பா, கத்துவா மற்றும் உதம்பூர் ஆகிய மாவட்டங்களில் 2ஜி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் காஷ்மீர் பகுதியிலுள்ள மற்ற மாவட்டங்களில் இன்னும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக நேற்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் அரசு அலுவலகங்கள் மீண்டும் பணியை தொடர உத்தரவிட்டிருந்தார். அதேபோல ஜம்மு-காஷ்மீரின் தலைமை செயலாளர் சுப்பிரமணியம், “ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தொலைத் தொடர்பு விரைவில் சீர் செய்யப்படும். அத்துடன் சட்ட ஒழுங்கு சூழலும் ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.