7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காமெடி நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ஷியாம் ரங்கீலா போட்டியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “நான் வாரணாசியில் போட்டியிட உள்ளேன். சூரத் மற்றும் இந்தூர்போல எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் பிரதமர் மோடி வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்க உள்ளேன். 2014இல் பிரதமர் மோடியின் சீடனாக இருந்தேன். அப்போது, பிரதமருக்கு ஆதரவாகவும், ராகுல், கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் மிமிக்ரி வீடியோக்களையும் பதிவிட்டு வந்தேன்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை தலைமைகீழாக மாறிவிட்டது. எனவே, இனி லோக்சபா தேர்தல்களில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன். வாராணசி சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். ஜனநாயக தேர்தலில் எல்லோரும் களமிறங்க உரிமை உள்ளது. நானும் வாரணாசியில் போட்டியிட உள்ளேன். எனக்கும் மக்கள் ஆதரவு தருவார்கள். வெற்றிபெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு பிறந்த ஷியாம் ரங்கீலா, ராஜஸ்தான் மாநிலம் பிலிபங்கா நகரில் உள்ள மனக்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர். மிமிக்ரி கலைஞரான அவர், அரசியல் தலைவர்களைப் போன்று பேசக்கூடியவர். பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போன்று பேசி பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஷ்யாம் ரங்கீலா, அதன்பிறகு பாஜகவை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக்கொண்ட ஷ்யாம் ரங்கீலா, தீவிரமாக அரசியல் களத்தில் இயங்கி வருகிறார். தற்போது வாரணாசியில் சுயேட்சையாய்ப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
வாரணாசியில் கடைசிக்கட்டமாக ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாலியல் புகார்|கர்நாடக எம்.பிக்கு சம்மன்.. அவகாசம் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா!