புத்தாண்டு நிகழ்ச்சியொன்றில் இந்துக் கடவுள்கள், அமித் ஷா, மீது ஆட்சேபகரமான கருத்துகள் கூறியதாக கைது செய்யப்பட்ட நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த மாதம் புத்தாண்டு தினத்தன்று இந்தூரில் உள்ள ஒருஹோட்டலில் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்துக் கடவுள்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைப் பற்றி ஆட்சேபகரமான கருத்துகள் கூறப்பட்டதாக பாஜக எம்எல்ஏ மாலினி லட்சுமணன் சிங்கின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 1ஆம் தேதி முனாவர் பாரூகி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாரூகி ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனைப் பரிசீலனை செய்த மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாரூகி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட தனி வழக்கில் வாரண்ட் உத்தரவையும் நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை 12 மணிக்குப் பிறகு முனாவர் ஃபாரூக்கி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறைச்சாலையின் பிரதான வாசலில் ஊடகவியலாளர்களைத் தவிர்ப்பதற்காகவும், அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அதிகாலையில் இந்தூர் சிறைச்சாலையின் மற்றொரு வாசலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. .